குமரி மாவட்டத்தில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ ஒருவர் நேற்று(ஜூலை_31) ஸ்டேஷனில் இருந்து ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தென்தாமரைகுளத்தை அடுத்த புவியூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கடந்த 1984 ஆம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த இவர் கடந்த 41 ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு, மற்றும் போக்குவரத்து பிரிவில் மாவட்டம் முழுவதும் பணியாற்றியவர். கடினமான போலீஸ் பணியிலும் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் போக்குவரத்து சீர் செய்து அனைவரது பாராட்டுகளை பெற்றவர். உயர் அதிகாரிகள் முதல் பல்வேறு அமைப்புகள் சார்பில் பாராட்டு பெற்ற அவர் நேற்று பணி ஓய்வு பெற்றார். வழக்கமாக பணி ஓய்வு பெறும் நாளில் கடைசியாக வேலை பார்த்த போலீஸ் ஸ்டேஷன் இருந்து பிரிவு உபச்சார விழா நடத்தி அங்கிருந்து தனியாக போலீஸ் வேனில் வீடுவரை கொண்டு வந்து விடுவது வழக்கம்.
இந்நிலையில் பணி ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணன் நேற்று கடைசியாக வேலை பார்த்த நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசில் தன்னை போலீஸ் ஜீப்பில் கொண்டு விட வேண்டாம், நான் ஓட்டமும் நடையுமாக வீடு வரை செல்ல முடிவு செய்துள்ளேன் என்று கூறினார். இதை கேட்டு ஆச்சரியமும் அதிர்ச்சிமடைந்த சக போலீசார் பாலகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்று நேற்று மதியம் 12:40 மணிக்கு கோட்டார் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தனது ஓட்டத்தை தொடங்கினார்.
கோட்டார், சுசீந்திரம்,வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைக்குளம், சாமிதோப்பு, ஆண்டிவிளை, தென் தாமரைக்குளம் வழியாக பிடித்த பாலகிருஷ்ணன் ஓட்டமும் நடையுமாக சென்றார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரிடம் கேட்டதற்கு போதை பொருட்கள் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஓடுவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் சிறிது தூரம் நடந்தார் இவ்வாறு சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தை ஓட்டமும் நடையுமாக கடந்து பிற்பகல் 2.45 மணியளவில் வீட்டிற்கு சென்றார்.அங்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வரவேற்பு அளித்தனர்.

இது குறித்து பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது :-
இன்றைய இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்களது உடல் நலத்தையும் வாழ்க்கையையும் சீரழித்துக் கொள்கின்றனர். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். இளைஞர்கள் உடல்நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஓய்வுபெறும் நாளில் நான் வேலை பார்த்த கோட்டார் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஓட்டமும் நடயுமாக வீட்டிற்கு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஓய்வுபெற்ற நாளில் கூட போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்களை விடுபட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ் எஸ்ஐ பாலகிருஷ்ணனை அனைவரும் பாராட்டினர்.
இவரது பணிக்காலத்தில் லஞ்சம் வாங்கினார் என்ற எத்தகைய குற்றச்சாட்டு இல்லாத சீர் உடை பணியாளர் என்பது இவரது தனி சிறப்பு.