• Wed. May 8th, 2024

புதுக்கோட்டையில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி மறுப்பு..!

Byவிஷா

Jan 18, 2024

புதுக்கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டிகளில் போதிய பாதுகாப்பின்மை கருத்தில் கொண்டு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்த அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக்த்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய வீர விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் ஜல்லிக்கட்டு போட்டிகள் என்பது வாடிவாசல் வழியாக வரிசையாக ஒவ்வொரு ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்படும். அதனை வாடிவாசல் அருகே மாடுபிடி வீரர்கள் பிடிப்பார்கள்.
இதில் மாடுகள் பிடிபட்டால் வீரர்கள் வெற்றி என்றும், மாடு பிடிபடவில்லை என்றால் மாடு வெற்றிபெற்றது என்றும் அறிவிக்கப்படும். குறிப்பிட்ட அளவிலான எல்லை கோட்டை மாடுகள் கடந்த பின்னர் அதனை மாட்டின் உரிமையாளர்கள் பிடித்துவிடுவர். சற்று பாதுகாப்பான முறையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
ஆனால், மஞ்சுவிரட்டு போட்டிகள் அப்படியியில்லை. அங்கு மாடுகள் ஆங்காங்கே வீதியில் கயிற்றுடன் அவிழ்த்துவிடப்படும். இதனால் பாதுகாப்புகள் குறைவாக இருக்கும். இதனால் பாதுகாப்பு பணியில் சென்ற காவலர்கள், அரசு அதிகாரிகளுக்கு கூட சில சமயம் பாதுகாப்பில்லா சூழல் உருவாகும். நேற்று சிவகங்கை, சிராவயல் பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் பாஸ்கரன் எனும் 13 வயது சிறுவன், முத்துமணி எனும் 32வயது இளைஞர் ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த வருடம் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் நவநீத கிருஷ்ணன் எனும் காவலர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படும் என்றும், ஆனால் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்த அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு குழு நிர்வாகிகள் உடன் மாவட்ட ஆட்சியர் உடனான ஆலோனை கூட்டத்தில், மஞ்சுவிரட்டு போட்டிகளில் போதிய பாதுகாப்பின்மை கருத்தில் கொண்டு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்த அனுமதியில்லை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *