7வது ரோல் பால் உலகக்கோப்பை போட்டி துபாய் நாட்டில் உள்ள யூஏஇ-யில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி பிரிவுகளில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, சவுதி அரேபியா, ஈரான், துபாய், கென்யா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் ஆண்கள் பிரிவில் தீபக் ராஜா, பெண்கள் பிரிவில் மதுமிதா, மஹதி, சுஷ்மிதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் கென்யா அணிகள் மோதியதில், 3–2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது.

உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர்கள் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த நிலையில், அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வீரர்கள், ரோல் பால் விளையாட்டு இந்தியாவில் 2003ஆம் ஆண்டு பூனேவில் உருவாக்கப்பட்டதாகவும், இன்று உலகம் முழுவதும் பரவி விளையாடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், இவ்விளையாட்டில் தற்போது ஏராளமான இளம் வீரர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருவதாகக் கூறிய அவர்கள், தமிழக அரசு ரோல் பால் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும், அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கவும் வேண்டும் என வலியுறுத்தினர்.




