விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணை நீர்மட்டம் 24 அடி உயரமாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக ராஜபாளையம், சங்கரன் கோவில், பகுதியிலிருந்து சீவலப்பேரி ஆறு ,தேவியாறு, காயல்குடி ஆறு, ஆகிய மூன்று ஆறுகளின் மூலமாக வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது .

அதன் காரணமாக வெம்பக்கோட்டை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் நீர் மட்டம் 19 அடியாக இருந்தது .தொடர்ந்து நீர் வரத்து காரணமாக 21 அடி ஆக உயர்ந்தது. கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூன்றாவது முறையாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அணையின் பாதுகாப்பை கருதி கலெக்டர் சுகபுத்ராவுக்கு வெம்பக்கோட்டை அணை நிரம்பியதாக தகவல் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து கலெக்டர் சுகபுத்ரா உத்தரவின் பேரில் அதிகாரிகள் அணையில் உள்ள ஐந்து மதகுகளில் முதலாவது மதகினை 600 கன அடி நீரை திறந்து விட்டனர். மேலும் அணக்கு தொடர்ந்து 600 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிரம்பியது. அதற்குப் பிறகு 10 மாதங்களுக்கு பிறகு அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.