நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஸ்ரீ கண்டிநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள நாகாத்தம்மாள் கோவிலின் ஆடித்திருவிழா, கடந்த 19 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக துவங்கியது. நாள்தோரும் அம்பாள், சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம், வளையல் அலங்காரத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்சியான இன்று அம்மனுக்கு 1008 குடங்களில் பாலாபிஷேகம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீ கண்டிநத்தம் விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில், மேளதாள வாத்தியங்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மஞ்சலாடையுடன் பால் குடங்களை சுமந்து வந்தனர்.
அப்போது அம்மனுக்கு செலுத்தப்படும் பால்குடம் யானை மீது ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பால்குட ஊர்வலத்தில், பெண் பக்தர்கள் சிலர் பக்தி பரவசத்தில் சாமி வந்து ஆடினர்.

பின்னர் நாகாத்தம்மாள் கோயிலை சென்றடைந்த பக்தர்கள், அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். நாகை நாகாத்தம்மாள் கோவில் ஆடித் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.