• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அப்பா இசையமைக்க! மகன் பாட.. அடடா!!

இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகி வரும் ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார். பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, ரோகித் ஆர்.வி.உதயகுமார், உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது!

பள்ளிப் பருவக் காதலை மையக்கருவாக வைத்து உருவாகி வரும் இந்த படத்திற்காக இசைஞானி ஐந்து பாடல்களை உருவாக்கித் தந்திருக்கிறார். கவிஞர் பழநிபாரதி எழுதிய ‘மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…’ என்ற பாடலை பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான கார்த்திக் பாடியிருக்கிறார். கவிஞர் சினேகன் எழுதிய மூன்று பாடல்களில், ‘வண்ண வரைகோல்கள் அவன் முகத்தை’ என்ற பாடலை ஹரிப்பிரியா பாடியிருக்கிறார்.

‘வெச்சேன் நான் முரட்டு ஆசை…’ பாடலை கன்னட திரையுலகின் முன்னணி பாடகி அனன்யா பட் பாடியிருக்கிறார். ‘அழகான இசை ஒன்று ….’ என்ற பாடலை கார்த்திக் – அனன்யாபட் ஜோடி பாடி இருக்கிறது. இந்த படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கும் பாடலை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது கிறங்கடிக்கும் குரலில் பாடிக்கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து இயக்குநர் ஆதி ராஜன் கூறுகையில், ‘இசைஞானியுடன் ஒரு படத்திலாவது பணியாற்றி விடவேண்டும் என்ற என்னுடைய பெருங்கனவு இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. பாடல் கம்போஸிங்கின் போது நான் பயந்து கொண்டே இருந்தேன். ஆனால் இளையராஜா உனக்கு என்ன தேவை என்று கேட்டு… தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார். இப்படத்திற்கு ஒரு பாடலை நீங்கள் எழுதிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டபோது, உடனே சம்மதித்து ‘இதயமே இதயமே இதயமே…. உன்னைத் தேடித் தேடிக் கழிந்ததிந்த பருவமே பருவமே பருவமே’ என்ற என்ற பாடலை எழுதிக் கொடுத்தார்.

இசைஞானி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். இந்தப் பாடலை யுவன்ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என்ற எனது ஆசையைத் தெரிவித்தேன். அவரும் உடனே யுவனை அழைத்துப் பாட வைத்தார். மும்பை பாடகி ஸ்ரீஷா இணைந்து பாடியிருக்கிறார். பிரஜன், சினாமிகா நடனமாடும் இப்பாடலை பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா வடிவமைக்கிறார். லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் மே மாதம் திரைக்கு வர இருக்கிறது.’ என்றார்!