வங்கக்கடலில் உருவான ’டிட்வா’ புயல் காரணமாக இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்தது. இதில், அந்நாட்டின் பல மாகாணங்கள் கடும் சேதமடைந்தன. மழை வெள்ளத்தில் சிக்கி 400க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 366க்கு மேற்பட்டோர் மாயமானதாகவும் இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிர்கதியாக நிற்கின்றனர்.


இந்நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியில் இலங்கை தமிழர் அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 35 ஆண்டுகளாக அகதிகளாக தங்க வைக்கப்பட்டிருக்கும் ஏறத்தாழ 500 குடும்பங்களை சார்ந்த 2000 மக்கள் தொகை கொண்ட இந்த முகாமில் உள்ளவர்களுக்கு தற்போது வரை குடியுரிமையோ? நிரந்தர வாழ்விடமோ? இல்லாத நிலையில் உள்ளனர்.


பலர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வரும் சூழ்நிலையிலும் கூட ’டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டு, நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பால்பவுடர், சர்க்கரை, பிஸ்கட், சேமியா, மேகி நூடுல்ஸ், கோதுமை, ரவை, அவல், ரஸ்க், வேட்டி, சேலைகள், ரவிக்கைகள்,கைலி, துண்டுகள், பேண்ட், சிறுவர் சிறுமி ஆடைகள், உள்ளாடைகள், போர்வைகள், நாப்கின், பேம்பர்ஸ், சலவை சோப்புகள், குளியல் சோப்புகள், சலவை பொடிகள், சாம்பு பாக்கெட்கள், பிரஷ், பேஸ்ட், எண்ணெய், பவுடர், மெழுகுவர்த்திகள் என சுமார் 2000 கிலோ எடை கொண்ட பொருட்களை இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து உதவ அம்முகாம் மக்களிடமிருந்து பெற்று 44 பெட்டிகளில் அடைத்து சென்னையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைத்தனர்.




