தேவநாதன் யாதவ் சொத்துகளை தற்காலிகமாக முடக்கி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மணென்ட் ஃபண்ட்’ என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி வசூலித்து மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குநரான தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் உள்ளிட்டோர் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவுப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில் தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமை நாதன் மற்றும் அந்த நிதிநிறுவன சொத்துகளை முடக்கக்கோரி ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மணென்ட் ஃபண்ட்’ நிதி நிறுவன முதலீட்டாளர்கள் சங்கத் தலைவரான எம்.சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் இந்த நிதிநிறுவனம் மூலமாக முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த தொகையை வைத்து பெரும் ஆதாயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால் தங்களது சொத்துகளை பாதுகாக்கும் முயற்சியில் அல்லது அவற்றை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே தேவநாதன் யாதவ் உள்ளிட்டோரது சொத்துகளை முடக்கி வைக்க தமிழக அரசுக்கும், போலீஸாருக்கும் உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், நிதிநிறுவன மோசடி வழக்கில் கைதாகியுள்ள தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமை நாதன் மற்றும் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மணென்ட் ஃபண்ட்’ நிதி நிறுவனம் ஆகியோரது சொத்துகளை தற்காலிகமாக முடக்கி வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு சம்பந்தப்பட்ட போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜன.7-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
தேவநாதன்யாதவ் சொத்துகளை தற்காலிகமாக முடக்க நீதிமன்றம் உத்தரவு
