ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை(பிப்ரவரி 8) எண்ணப்படுகிறன.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற்றது. தேர்தல் களத்தில் திமுக, நாம் தமிழர் கட்சி உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 53 இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த 237 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்குப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, சித்தோட்டில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி.) வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து அங்கு நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை (பிப்ரவரி 8) காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. இதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படும். பகல் 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றிப் பெறப்போவது திமுகவா, நாதக என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.