• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சென்னை எம்.ஐ.டியில் மேலும் 61 மாணவர்களுக்கு கொரோனா

சென்னை எம்.ஐ.டியில் ஏற்கனவே 81 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 61 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அங்கு மாணவர்களுக்கு தொடர்ச்சியாக சளி மற்றும் காய்ச்சல் இருந்ததால் விடுதி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் என 1,417 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 67 பேருக்கு தொற்று உறுதியானது. மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து எம்.ஐ.டி கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த எண்ணிக்கை 81 ஆக அதிகரித்தது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில், 50 மாணவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. மேலும் 330 பேரின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருந்த நிலையின் இன்று அந்த பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. பரிசோதனை முடிவில் மேலும் 61 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சென்னை எம்.ஐ.டியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட 61 மாணவர்களில் 58 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தொற்று பாதிக்கப்பட்டிருந்த 81 பேரில் 40 மாணவர்கள் உரிய பாதுகாப்புடன் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 41 மாணவர்கள் விடுதியிலேயே தனித்தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி வளாகத்தில் இருந்து மாணவர்கள் வெளியே செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.