கலகலப்பான பேச்சுக்கும் சர்ச்சைப் பேச்சுக்கும் பெயர் பெற்றவர்தான் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
நடைபெற இருக்கின்ற 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், வேலூர்மாவட்டம் காட்பாடி ஆரிய முத்துமோட்டூரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
இக்கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு பேசியதாவது..,
“பஞ்சாயத்து தேர்தல் என்பது முக்கியமானது. நிதியை பஞ்சாயத்து தலைவர்களிடம் தான் ஒப்படைப்பார்கள் கிராமங்களில் அடிப்படை தேவையை அவர்கள் தான் நிறைவேற்றுவார்கள். தெருவிளக்குகள் அமைப்பது போன்ற பணிகளையெல்லாம் செய்வார்கள். ஆனால் நீங்கள் சரியில்லாத தலைவரை தேர்வு செய்தால் அந்த தலைவரானவர், தெருவுக்கு விளக்கு போடும் பணத்தில் மனைவிக்கு கம்மல் போட்டுவிடுவார்.
திமுக அரசு தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கியது. தற்போது விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகளை கொடுத்துள்ளோம். திமுக அரசு பொறுப்பேற்று 150 நாட்கள் தான் ஆகிறது அதனால் மக்களாகிய நீங்கள் எங்களை என்ன செய்தீர்கள் என கேட்க கூடாது. ஒரு குழந்தையை பெற்றெடுக்கவே 10 மாதங்களாகிறது.
நீங்கள் அனைவரும் கொரோனாவிலிருந்து உங்களை பாதுகாத்துகொள்ள தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும்” என்று கூறினார்.
“அரசுப் பேருந்துகளில் நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்தோம் மகளிரும் வரவேற்கின்றனர். ஆனால் சில அரசு பேருந்து நடத்துநர்கள் பேருந்து அவன் அப்பன் வீட்டு சொத்து போல் பெண்களை நடத்துகின்றனர் என புகார் உள்ளது. அவ்வாறு பெண்களை தரக்குறைவாக நடத்தினால் அவர்களை முறைத்தால் அடியுங்கள். அப்படி செய்யும் நடத்துநர்களை வேலையை விட்டே அகற்றி வீட்டிற்கு அனுப்பிவிடுவேன்” என பேசினார் .