• Mon. Apr 29th, 2024

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை

Byவிஷா

Mar 18, 2024

இன்று மதியம் 3 மணிக்கு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஆலோசனை நடத்துகிறார்.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டனர்.
எந்த கோப்புகள் மீது முடிவெடுத்தாலும் அதற்கு தலைமை தேர்தல் அதிகாரியின் அனுமதியை பெற வேண்டும். தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்து விட்ட காரணத்தால் தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்கள் அலுவலகத்தையும், 39 எம்.பி.க்கள் அலுவலகங்களையும் காலி செய்யுமாறு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதன்படி எம்.எல்.ஏ.க் களும், எம்.பி.க்களும் தங்களது சொந்த பொருட்களை எடுத்துக் கொண்டு அலுவலகங்களை காலி செய்து விட்டனர். இப்போது கட்சித் தலைவர்களின் பெயர் பலகை, சிலைகளை துணியால் மூடும் வேலை தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சென்னையில் இன்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளான மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார். தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
கூட்டத்துக்கு வர இயலாத கலெக்டர்கள் காணொலி வாயிலாக கூட்டத்தில் இணைந்து கொள்வார்கள். இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேர்தல் அதிகாரிகளின் பணிகள் குறித்தும், வேட்பு மனு தாக்கலின் போது என்னென்ன நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது பற்றியும் தலைமை தேர்தல் அதிகாரி எடுத்துரைப்பார். அது மட்டுமின்றி வாக்குச் சாவடிகள் அமைப்பது, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு போதிய பயிற்சி கொடுப்பது உள்பட பல்வேறு பணிகள் குறித்தும் அவர் விவாதிக்கிறார்.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து முகவரி மாறியவர்கள் 18 வயது நிரம்பியவர்கள் என ஏராளமானோர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். தேர்தல் அலுவலகங்களுக்கு சென்றும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
இவற்றை முறையாக பரிசீலித்து துணை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது பற்றியும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவு பிறப்பிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *