எஸ்.எஸ். ராஜேந்திரனின் மகள் லட்சுமிக்கும், மருமகள் சுஜைனிக்கும் இடையே நேற்று முன்தினம் (பிப்.13) தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த லட்சுமி, சுஜைனியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சுஜைனி ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
பராசக்தி, மறக்க முடியுமா, பூம்புகார், மனோகரா உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் மறைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன். இவரது மகள் லட்சுமி, மகன் மருதுபாண்டி ஆகியோர் தங்களது குடும்பத்துடன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
மருதுபாண்டியின் மனைவியும், எஸ்.எஸ்.ஆரின் மருமகளுமான சுஜைனி (40) தங்களது வீட்டு வாசலில் இளநீர் விற்கும் ஒருவரை இரவு நேரக் காவலாளியாகப் பணி அமர்த்தியதுடன், இரவு வீட்டில் தங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
மேலும், காவலாளி பணிக்கான சம்பளத்தைத் தருவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில், எஸ்.எஸ்.ஆரின் மகள் லட்சுமிக்கு இது பிடிக்கவில்லை. மேலும், இளநீர் விற்பவரைக் காவலாளியாக நியமிப்பதற்கு பதிலாக வேறொருவரைக் காவலாளியாக நியமிக்க வேண்டும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதனால் எஸ்.எஸ் ஆரின் மகள், மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப்.13) இரவு மகள் லட்சுமிக்கும், அவரது அண்ணி சுஜைனிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த லட்சுமி, சுஜைனியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த சுஜைனி ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அதன் பின்னர், இதுகுறித்து சுஜைனி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் லட்சுமி மீது புகார் அளித்தார். இதற்கிடையே, சுஜைனி தன்னை தாக்கியதாக லட்சுமியும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.