• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

ஆணவப் படுகொலை தடுப்புச்சட்டத்திற்கான ஆணையம்…பாஷாவுக்கு எதிர்ப்பு!

ByKalamegam Viswanathan

Oct 26, 2025

சாதி ஆணவ படுகொலை தடுப்புச் சட்டம் இயற்றிட ஆணையம் அமைக்கப்படும் என்று நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த ஆணையம் ஓய்வு பெற்ற  நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

ஆனால் இந்த நீதிபதி பாஷாவின் பின்னணியைக் குறிப்பிட்டு, இந்த ஆணையத்துக்கு இவர் பொருத்தமானவர் அல்லர் என்று எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்கிறது தலித் விடுதலை இயக்கம்.

ஏன் இந்த எதிர்ப்பு?

இது குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையாவிடம்  அரசியல் டுடே வார  இதழ் சார்பில் பேசினோம்.

அவர் நம்மிடம்,

 ‘சாதி ஆணவ படுகொலையை தடுக்கும் சட்டம் கொண்டுவரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது நல்ல விஷயம்.  திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் கடந்த 4 ஆண்டுகளாக தலித் விடுதலை இயக்கம் முன்னெடுத்த தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும். இதற்காக பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் போராடியுள்ளன. ஆனால் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் என்பது மறு பரிசீலனைக்குரியது. இவர் மற்ற வழக்குகளில் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கலாம்.

ஆனால் தமிழ்நாடே பற்றி எரிந்த தருமபுரி சாதி மறுப்புத் திருமண இணையர்கள் இளவரசன், திவ்யா சம்பந்தப்பட்ட வழக்கில் நேர் எதிராகவும் சட்டவிரோதமாகவும், சமூக நீதிக்கு எதிராகவும் நடந்துகொண்டவர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கடந்த 2013-ஆம் ஆண்டு தருமபுரியில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசன் திவ்யா இணையர்களை பிரிக்கும் நோக்கில் பாமக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த பாலு தலைமையில் மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் திவ்யாவின் தாய் தேன்மொழி மூலமாக ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில் தன் மகளை மீட்டுத் தருமாறும் இளவரசன் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்கிறார் என்றும் இளவரசன் திருமணம் செல்லாது வயது 21 ஆகவில்லை என்றும் ஆட்கொணர்வு மனுவில் கூறப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கே. என்.பாஷா, தேவதாஸ் உள்ளிட்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

திவ்யாவும், இளவரசனும் ஆஜராகினர்.  ’யாரும் என்னை கடத்தவில்லை. நாங்கள் விரும்பியே இணைந்து வாழ்கிறோம்’ என்று திவ்யா நீதிமன்றத்தில் நேரடி சாட்சியம் அளித்தார்.

அதோடு (HP) ஆட்கொணர்வு மனுவைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டிய நீதிபதி கே. என். பாஷா, சாதிவெறி கும்பலின் கருத்துக்கு இசைவு தெரிவித்து அதே வழக்கில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் மீண்டும் மீண்டும் தேவையின்றி வாய்தா நாள் குறித்து திட்டமிட்டு திவ்யாவை ஆஜராக வைத்து, திவ்யாவின் மனதை மாற்ற வாய்ப்புகள் கொடுத்தார்.

இறுதியில் வழக்கின் வழியாகவே திவ்யா, இளவரசனோடு வாழ விரும்பவில்லை என்று அறிவிக்க வைத்தனர். அதோடு ஜூலை 1 அன்று, திவ்யா தன் தாயிடம் செல்வதாக அறிவித்த பின் தானாக வழக்கை முடித்தார் நீதிபதி. அதன் பின் ஜூலை 4 அன்று இளவரசன் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டார். ஆக காதலரை பிரிப்பதற்கும். இளவரசன் சாதி ஆணவக் கொலைக்கும் ஒரு வகையில் இந்த வழக்கை  நடத்திய விதமும்   காரணமாக அமைந்தது.

நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிபதி சாதிய அநீதிக்கு துணைபோனார் என்பதே இவ்வழக்கின் சாட்சி.

ஆகவே அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற விதியை மீறி சட்டத்தின் படி தீர்ப்பு வழங்காமல் சட்டப்படி இணையர்களுக்கு பாதுகாப்பு கொடுக்காமல், சாதிய கும்பலுக்கு ஆதரவாக நடந்துகொண்டார் என்பதன் அடிப்படையில் இவர் தமிழக அரசு அமைக்க உள்ள ஆணையத்திற்கு பொருத்தமானவர் இல்லை என்று கருதுகிறோம்.

முன்னாள் நீதிபதி கே. என் பாஷா தலைமையில் ஆணையம் அமைத்திருப்பது திமுகஅரசு முன்னெடுக்கும் ஆணவக்கொலை குற்றங்கள் தடுப்புச் சட்டத்திற்கே நேர்மாறாகவும், தலித் மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையிலும் சட்டத்தின் கூறுகள் அமைந்துவிடும் என்று கருதுகிறோம். தமிழக அரசு உடனடியாக நீதிபதி கே.என்.பாஷாவை மாற்றிட வேண்டும்” என்று  விரிவாக பேசினார் கருப்பையா.

ஒவ்வொரு நியமனத்திலும் எவ்வளவு பின்னணி இருக்கிறது!