• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முதலாம்ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு செப்டம்பரில் கல்லூரி திறப்பு

Byவிஷா

Jun 29, 2024

முதலாம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் கல்லூரிகள் திறக்கப்படும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் தெரிவித்ததாவது..,
அனைத்துவித உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; ஏஐசிடிஇ சார்பில் ஆண்டுதோறும் கல்வியாண்டுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. இதை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வகுப்புகள் தொடங்கும் நாள், பருவத்தேர்வுகள் மற்றும் விடுமுறைகள் உட்பட அனைத்து அலுவல் விவகாரங்களையும் முடிவு செய்து செயல்படுகின்றன.
அதன்படி வரும் கல்வியாண்டுக்கான(2024-25) கால அட்டவணை தற்போது வெளியிடப்படுகிறது. அந்தவகையில் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார நீட்டிப்பை பல்கலைக்கழகங்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் வழங்கவேண்டும். தொடர்ந்து பொறியியல் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்து முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். மேலும், நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையையும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும்.
இது தவிர கல்லூரிகளில் சேர்ந்து செப்டம்பர் 11-ம் தேதிக்குள் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணம் வழங்கப்பட வேண்டும். அதேபோல், முதுநிலை மேலாண்மை பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகளும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் ஆரம்பிக்கப்பட வேண்டும். மேலும், திறந்தநிலை மற்றும் இணையவழி படிப்புகளுக்கு யுஜிசி வழிமுறைகளை பின்பற்றி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.