கோவை, சிங்காநல்லூர் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சிங்காநல்லூர்- திருச்சி ரோட்டில் உழவர் சந்தை அருகில் இரவு 2 மணிக்கு அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். காரை ஓட்டி வந்தவரிடம் எங்கு இருந்து வருகிறீர்கள் ? என்று சொல்கிறீர்கள் என்று விவரங்களை போலீசார் கேட்டனர்.

அப்போது அவர் குடித்து இருந்ததாக கூறப்படுகிறது. அவர் முன்னுக்கு பின், முரணாக பதில் கூறியதால் போலீசார் அவரது காரை சோதனை செய்தனர். கார் டிக்கி மற்றும் காரின் உள் பகுதியில் போலீசார் சோதனை செய்த போது காரில் நீளமான துப்பாக்கி ஒன்று இருந்தது. இதைப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே காரை ஓட்டி வந்தவரிடம் அவர் பெயர் விலாசம் மற்றும் இந்த துப்பாக்கி யாருடையது ? எதற்காக எடுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டனர். அப்போது அவர் எனது பெயர் அன்புச்செல்வன் கோவை, ராமநாதபுரத்தை சேர்ந்தவன் என கூறினார். இது பலூன்களை சுடுவதற்கு பயன்படுத்தும் ஏர்கன் என்று பதில் அளித்து உள்ளார். ஆனால் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அதோடு அவரிடம் இருந்து கைப்பற்றிய ஏர்கன் கோவை ஆயுத தொழிற்சாலை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அது எந்த வகை துப்பாக்கி என்பதை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அது உண்மையிலேயே ஏர்கன் துப்பாக்கி தானா? பலூன்களை மட்டும் சுடுவதற்காக பயன்படுத்தப்படுவதா ? இரவு நேரத்தில் ஏர்கன் துப்பாக்கி உடன் எங்கு சென்று வருகிறார் என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிங்காநல்லூரில் இந்த சம்பவத்தால் நள்ளிரவில் பரபரப்பு நிலவியது.