சென்னை பல்லாவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறும் பள்ளியில் அமைச்சர் விழா நடைபெற்றது. அதனால் மாணவர்களுக்கு முழு கவனத்துடன் தேர்வு எழுத முடியாமல் கவனச் சிதறல் ஏற்பட்டது.
நாங்க எங்கள் பாட்டிற்கு விழாவை நடத்தினோம். மாணவர்கள் அவர்களுக்கு பாட்டிற்கு தேர்வு எழுதினார்கள். அவ்வளவுதாங்க நடந்தது என அமைச்சர் பதில் கூறினார்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மதியம் தேர்வு நடைபெற உள்ள நிலையில் 11ஆம் வகுப்பு மாணவர்களை வைத்து இசை கருவி வாசித்து அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை பல்லாவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 92 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சுமாட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு இன்று அமைச்சர் கே. என். நேரு, தாமோ அன்பரசன் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களை பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவிகளை வைத்து மேளதாளங்கள் இசைக்கருவிகள் இசைத்து அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
500க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் பள்ளி வளாகத்தில் குவிந்து இருந்தனர். அதே வேளையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்று வந்ததால், தேர்வு எழுதிக் கொண்டிருந்த பெரும்பாலான மாணவ, மாணவிகள் முழு கவனத்துடன் தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு எழுதுவதற்கு முன்னோட்டமாக அமைவது தான் காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வுகள். இது போன்று மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வுகள் நடைபெறும் பொழுது, அரசு விழாக்களை அரசு பள்ளியில் நடைபெற்றதால் மாணவர்கள் முழு கவனத்துடன் தேர்வு எழுத முடியாமல் கவனச் சிதறல் ஏற்பட்டது.
இது குறித்து அமைச்சரிடம் கேட்ட பொழுது அவர்கள், அவர்கள் பாட்டிற்கு தேர்வு எழுதினார்கள். விழா அது பாட்டிற்கு நடந்தது. மேளதாளங்கள் சாலையில் தான் நடைபெற்றது. அவ்வளவுதாங்க எனக்கூறி புறப்பட்டுச் சென்றார்.