தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி வளாகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில், போர்க்காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி வளாகப் பகுதியில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, நகராட்சி துறையினர் இணைந்து போர் நடைபெற்றால் எவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக போர்க்காலங்களில் எவ்வாறு பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கான அறிகுறிகள் எவ்வாறு இருக்கும். அந்த நேரத்தில் சைரன் ஒலித்தால் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து குறும்படங்கள் திரையில் ஒளிபரப்பி காண்பிக்கப்பட்டது.

அந்த குறும்படங்களில் போர் நடைபெற்றால் பணி செய்யும் இடங்களில் சைரன் சத்தம் கேட்டவுடன், பணியாளர்கள் தங்களது சக பணியாளர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும். அவர்களுடன் ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு கொண்டு செல்லாமல் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தலையில் கைகளை வைத்தவாறு குனிந்து மறைவான பகுதிக்கு செல்ல வேண்டும், உடனடியாக மின்விளக்கு அணைக்கப்பட வேண்டும். ஜன்னல், கதவு உள்ளிட்டவற்றை மூடிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற காட்சி அமைப்புகள் இருந்தது.
மேலும் இதே போன்று பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவ, மாணவிகள் எவ்வாறு இந்த போர்க்காலங்களில் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், வீடுகளில் இருப்பவர்கள் எவ்வாறு தங்களை தாக்காது காத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விளக்கி அந்த காணொளியில் காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே தங்களது பணிகளை செய்து கொண்டு இருப்பதைப் போன்றும் திடீரென தீயணைப்புத்துறை வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பப்பட்டவுடன், செய்து கொண்டிருந்த பணிகளை அப்படியே விட்டுவிட்டு உடனடியாக அருகே உள்ள மறைவான இடங்களுக்குச் சென்று கதவுகள், ஜன்னல் போன்றவற்றை மூடிக்கொண்டு விளக்குகளை அனைத்து அனைவரும் மேஜைகளுக்கு அடியில் ஒளிந்து கொள்ளுவது போன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அதிகாரிகள்
பங்கேற்றனர். தொடர்ந்து அரசு அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் அனைவரும் வரக்கூடிய எந்த நிகழ்விற்கும் தயார் நிலையில், இருக்குமாறு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பிலும், நகராட்சி நிர்வாகத்தினர் சார்பிலும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கம்பம் தீயணைப்புத்துறை நிலை அதிகாரி, ராஜலட்சுமி தலைமையில் தீயணைப்புத்துறையினர், நகராட்சி மேலாளர் ஜெயந்தி, சுகாதார அலுவலர் அரசகுமார் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.