• Mon. Nov 3rd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

CITU வின் 16 வது மாநில மாநாடு..,

BySeenu

Nov 2, 2025

CITU வின் 16 வது மாநில மாநாடு கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள எஸ் என் ஆர் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. நவம்பர் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் மாநிலத் துணைத் தலைவர் சந்திரன், வரவேற்பு குழு தலைவர் பத்மநாபன், கோவை மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட பொருளாளர் வேலுசாமி ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், 1970 ம் ஆண்டு துவங்கப்பட்ட சிஐடியு 50 ஆண்டுகளை கடந்துள்ளது என்றனர். 6ம் தேதி கோவையில் துவங்க உள்ள 16வது மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 750 பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள் என்றனர்.

அந்த மாநாட்டில் தியாகிகள் ஜோதி நிகழ்ச்சியும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர். இந்த மாநாட்டை சிஐடியு அகில இந்திய தலைவரும் முன்னாள் எம்பியுமான தபன்சன், நிர்வாகிகள் ஹேமலதா ஆகியோர் துவக்கி வைக்க உள்ளதாகவும் முன்னதாக ஐந்தாம் தேதி வரலாற்று கண்காட்சி நடைபெற உள்ளதாக தெரிவித்தனர். மேலும் பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்பு சிவப்பு சட்டை பேரணியும் நடைபெற உள்ளதாக கூறினர்.

மத்திய அரசாங்கம் தனியார் மயமாக்கல் கொள்கைகளை தீவிரமாக அமலாக்கி கொண்டிருப்பதாகவும் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகிக் கொண்டிருப்பதாகவும் வறுமை பசி பட்டினி ஆகியவை தாங்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதாகவும் பொருளாதார நெருக்கடி அடக்குமுறை சட்டங்கள் ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக கூறினர்.

தொழிலாளர் சட்ட திருத்தம் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஆதரவாக தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கின்ற சட்டத்தை கொண்டு வந்துள்ள நிலைகள் இதையெல்லாம் பற்றி மாநாட்டில் பேச உள்ளதாக குறிப்பிட்டனர்.

தமிழகத்தில் திராவிட மாடல் அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் அதே சமயம் உழைப்பாளிகள் பிரச்சினை என்று வருகின்ற பொழுது சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனை, கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களுக்கு எதிரான தங்களது போராட்டங்கள், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான போராட்டங்கள், மின்வாரிய ஊழியர்களுக்கான போராட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான போராட்டம் ஆகியவற்றில் தமிழக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சரியானது அல்ல என்று தெரிவித்தனர்.

இந்தியாவில் அனைத்து பகுதிகளுக்கும் தொழிலாளர்கள் சென்று வேலை செய்வது என்பது உள்ளது, பீகார் மாநிலத்திலிருந்து வேலைக்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் என்று கூறினாலே பீகாரில் வேலை வாய்ப்பு இல்லை என்பதைத்தான் பார்க்க முடிவதாகவும் பீகார் மக்கள் இங்கு துன்புறுத்தப்படுவதில்லை என தெரிவித்தனர்.

நாட்டு மக்கள் எங்காவது சென்று துன்புறுத்தப்படுகிறார்கள் என்று நாட்டின் பிரதமரே கூறினால் அது கவலை அளிக்கக்கூடிய விஷயம் என்றும், பிரதமர் தேர்தல் ஆதாயத்திற்காக மலிவான அரசியலை செய்கிறார் என விமர்சித்தனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களை பதிவு செய்து அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்று சிஐடியு நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் அதனை இந்த அரசாங்கம் செய்யவில்லை என குறிப்பிட்டனர்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சட்டத்தை 42 ஆண்டு காலங்களாக தமிழகத்தை ஆண்ட எந்த கட்சிகளும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள் பணிபுரியும் பணியாளர்கள் யாருக்காவது பாதுகாப்பு உள்ளதா, ஊதிய உயர்வு, பஞ்சப்படி, மருத்துவ பலன்கள், பண பலன்கள் வழங்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினர். மேலும் பணியாளர்களை ஒட்ட சுரண்டுவது எப்படி என்று கோவை முதலாளிகள் மிக நன்றாக கற்று வைத்துள்ளார்கள் என்றும் தொழிற்சங்கம் மட்டும்தான் தொழிலாளிகளை பாதுகாக்க முடியும் என தெரிவித்தனர். மேலும் பத்திரிகையாளர்களுக்கும் சங்கம் என்று ஒன்று இல்லை என்றால் அடி வாங்குவதை தவிர அவர்களுக்கும் நிறுவனம் கிடையாது என கூறினர்.

ஒப்பந்த முறை என்பது தலைவிரித்து ஆடுவதாகவும் சம வேலைக்கு சம ஊதியம் இருக்கிறதா? அனைத்து அரசு துறைகளிலும் அவுட்சோர்ஸிங் என்ற பெயரில் கொள்ளை நடப்பதாக கூறினர். மேலும் எங்கும் கண்ணியமான பணிச்சூழல் கிடையாது பணி பாதுகாப்பு கிடையாது இதிலிருந்து மாற்றம் தேவை என்றால் தொழிற்சங்கம் மட்டும்தான் ஒரே தீர்வு என குறிப்பிட்டனர்.

நெல் கொள்முதல் பற்றி ஏராளமான விவரங்கள் வந்துவிட்டது என்றும் ஆனால் அரசின் அறிவிப்பு வேறாக உள்ளது கடந்த காலங்களைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக கொள்முதல் செய்து விட்டோம் என்று அரசு கூறுவதாகவும் நெல் கொள்முதல் ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படுத்தினாலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்வதாகவும் அந்த குறைபாடுகளை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் கொள்கைகளை சிஐடியு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், போக்குவரத்து தொழிலாளர்கள் டாஸ்மாக் தொழிலாளர்கள் மின்வாரிய தொழிலாளர்கள் பிரச்சனைகள் என்பது தொடர்ந்து கொண்டே தான் இருப்பதாகவும் உள்ளாட்சி பணியாளர்கள் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது என்பதை சிஐடியு ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்தனர். தொழிலாளர்கள் நலனை முன் வைத்து தான் திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்துடன் மோதிப் போராடி வருவதாகவும் தெரிவித்தனர்.

குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதில் கூட அரசாங்கம் தயக்கம் காட்டுவதாக கூறிய அவர்கள், அதற்குக் காரணம் முதலாளிகளும் அரசு தரப்பு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தொழில்சங்க வலிமை இல்லாததால் தொழிலாளர்களிடம் பேசுவதில்லை என கூறினர். இதன் காரணமாகவே அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியம் எங்கும் அமலாக்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினர். இதைப் பற்றி மத்திய மற்றும் மாநில அரசாங்கம் இரண்டுமே கண்டு கொள்வதில்லை எனவும் தெரிவித்தனர்.

NTC ஆலைகள் போராட்டம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர்கள், இரண்டு லட்சம் கோடி சொத்துக்கள் நாடு முழுவதும் இருக்கிறது என்றும் பாலிஸ்டர் யான்களில் என்டிசி நிர்வாகம் நூல்களை உற்பத்தி செய்தவரை அவர்கள்தான் விலை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தார்கள் என்றும் ஆனால் தற்பொழுது எந்த ஒரு கொள்கை முடிவும் எடுக்காமல் மத்திய அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து வருவதாக குற்றம் சாட்டினர்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அரசு பிரஸை கொடுத்தால் நான் நடத்திக் கொள்வேன் என்கிறார் TANTEA தேயிலை தோட்டத்தை கொடுத்தால் நான் நடத்திக் கொள்வேன் என்று கூறுகிறார் ஆனால் பூட்டி கிடக்கக்கூடிய என்டிசி ஆலைகள் பற்றி ஏதாவது பேசுகிறாரா என கேள்வி எழுப்பினர். மத்திய அரசு என்பது கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைதான் என விமர்சித்தனர். AI தொழில்நுட்பம் வந்த பிறகு ஐடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறினர்.

பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருந்தால் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் விசாரணை நடைபெற்று தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் தகுதியான நபர்களை கண்டறிந்து வேலைக்கு அமர்த்துவது என்பது அரசின் கடமை அதில் லஞ்சம் வாங்கினார் என்றால் மாநில அரசு அதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமா கேட்டுக் கொண்டனர்.

மேலும் அவுட்சோர்சிங் முறை என்றாலே அனைவரும் கொள்ளை அடிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்ட அவர்கள் தூய்மை பணியாளர்களை சட்டரீதியாக அனைத்து உரிமைகளுடன் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தனர். ஐ டி துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் எந்த பணி பாதுகாப்பும் இல்லாமல் பணி செய்து வருவதாக தெரிவித்த அவர்கள் ஐடி யூனியன் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினர்.

சாலையோர வியாபாரிகள் பிரச்சனை குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர்கள் சாலையோர வியாபாரிகள் கடையில்லாமல் கூட வியாபாரம் செய்து விடலாம் ஆனால் காவல்துறையினருக்கு மாமுல் அளிக்காமல் வியாபாரம் நடத்த முடியாது எந்த இடத்தில் கடை போட்டால் எவ்வளவு தர வேண்டும் என்று காவல்துறையினர் தான் தீர்மானிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டிய அவர்கள், தள்ளுவண்டி என்பது தடை செய்யப்பட வேண்டிய ஒன்றுதான் என்றும் அது பற்றி இந்த மாநாட்டில் நிச்சயம் பேசப்படும் என தெரிவித்தனர். மேலும் இந்த மாநாட்டில் கவனயீர்ப்பு தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் எனக் கூறினர்.