• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கரூரில் கனமழை காரணமாக தண்ணீரில் மூழ்கிய சர்க்கஸ் கூடாரம்

Byவிஷா

May 21, 2024

கரூரில் நேற்று பெய்த அதிகனமழை காரணமாக, அங்கு நடைபெற்று வரும் கோவில் திருவிழாவுக்காக சிறிய அளவில் தொடங்கப்பட்ட சர்க்கஸ் கூடாரம் தண்ணீரில் மூழ்கியது.
கரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 324 பேர் 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வருவாய்த் துறையினர் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று (மே.20) மாலை 3.45 மணிக்கு தொடங்கி சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மிக கன மழை பெய்தது. இன்று (மே.21) காலை 8 மணி வரை 132.60 மி.மீட்டர் மழைப் பதிவாகி உள்ளது.
கனமழை காரணமாக, கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பக்தர்கள் அவதியடைந்தனர். கோயிலினுள் மழை வெள்ளம் புகுந்த நிலையிலும் நந்திக்கு பிரதோஷ அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் மழை நீரில் நின்றபடி வழிபாடு செய்தனர். இதேபோல் தாந்தோணிமலை குறிஞ்சி நகர் உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. குடியிருப்பு வாசிகள் அவதியடைந்தனர்.
தெரசா முனை, சுங்கவாயில் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. வெள்ளியணை அருகேயுள்ள செல்லாண்டிபட்டி காலனி பகுதியில் நேற்றிரவு குடியிருப்புகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு இரவு மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.
இதேபோல் ஜெகதாபியை அடுத்த அல்லாளி கவுண்டனூரில் 25 குடும்பங்களை சேர்ந்த சுமார் 80 பேர் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியிலும், உப்பிடமங்கலம் அருகேயுள்ள புகையிலை குறிசனூரில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் உப்பிடமங்கலம் தனியார் திருமண மண்டபத்திலும், ஏமூர்புதூர் காலனியில் வசிக்கும் 15 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திலும் தங்க வைக்கப்பட்டனர். அனைவருக்கும் இரவு மற்றும் காலை உணவு வருவாய்த்துறை சார்பில் வழங்கப்பட்டன.
கரூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் நடைபெறுவதால் தாந்தோணிமலை அருகே ராயனூரில் சிறிய அளவிலான சர்க்கஸ் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. நேற்று பெய்த அதி கனமழையால் சர்க்கஸ் கூடாரமும் மழை வெள்ளத்தில் மூழ்கியது.