• Fri. Apr 26th, 2024

ராஜபாளையத்தில் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

ByKalamegam Viswanathan

Apr 26, 2023

ராஜபாளையத்தில் உள்ள புதுப்பாளையம் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்வான பூக்குழி வரும் 4 ம் தேதி நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் – தென்காசி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே புதுப்பாளையம் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. 8 சமுதாயத்தினர் சார்பில் சித்திரை மாதம் 11 திருவிழாக்கள் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நெசவாளர்களால் திரிக்கப் பட்ட கொடிக் கயிறு, நேற்று இரவு பெட்டி பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
இன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் கொடி மரம், பலி பீடத்திற்கு மஞ்சள் காப்பு கட்டிய பிறகு, அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. காலை 6.50 மணி அளவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்தில் நெற்கதிர்கள் வைத்து கட்டி, நிலை மாலை சார்த்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்னும் 9 நாட்களுக்கு தினம் ஒரு சமுதாயத்தினர் சார்பில் திருவிழா நடைபெற்ற பின்னர் வரும் 4 ம் தேதி முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *