தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை புதூரில் அமைந்துள்ள வைகை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல் நாள் நிகழ்வாக நேற்று இரவு 10:30 மணியளவில் வைகை அணையிலிருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து வந்து பெண்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து வான வேடிக்கையும் வெடிக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று முக்கிய நிகழ்வாக ஏராளமான பக்தர்கள் வைகை மாரியம்மன் கோவிலுக்கு அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து கோவில் முன்பு உருவேற்றப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தொடர்ந்து நாளை மாலை கரகம் கரைக்கும் நிகழ்வு மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து சென்று வைகை அணையில் கரைக்கப்படும் என விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.