சின்னசேலம் ஏரி கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டிலேயே 2வது முறையாக நிரம்பி வழிந்தோடுகிறது. சின்னசேலம் நகரின் மையப்பகுதியில் சுமார் 355 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி சின்னசேலம் நகரப்பகுதி மக்களின் மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. அதாவது இந்த ஏரி பகுதியில்தான் பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் கிணறுகளை வெட்டி பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகிறது.
இந்நிலையில் போதிய மழை இல்லாத காரணத்தால் கடந்த 8 ஆண்டுகளாக சின்னசேலம் ஏரி நிரம்பவில்லை. ஏனெனில் கோமுகி அணையில் இருந்து ஏரிகளுக்கு நீர் வரும் கடத்தூர் வனப்பகுதியில் உள்ள கால்வாய், மரவாநத்தம் கால்வாய்கள் தூர்ந்து போய் இருந்தன. இதனால் ஏரிகளுக்கு விரைவாக நீர்வர முடியவில்லை.
இந்நிலையில் உதயசூரியன் எம்எல்ஏவின் முயற்சியால் கடத்தூரில் உள்ள வனப்பகுதியில் உள்ள கால்வாய் அரசு மூலம் நிதி ஒதுக்கி சீரமைக்கப்பட்டது. அதேபோல சின்னசேலம் பகுதியை சேர்ந்த இணையும் கைகள் அமைப்பினரும் மரவாநத்தம் கால்வாய் பகுதிகளை பொக்லைன் வைத்து சீரமைத்ததன் காரணமாக இந்த ஆண்டு துவக்கமான ஜனவரியிலேயே ஏரி நிரம்பி வழிந்தோடியது. தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாக கல்வராயன்மலை பகுதியில் கனமழை பெய்தது
.
இதனால் கோமுகி அணைக்கு அதிக நீர்வரத்தின் காரணமாக கடத்தூர், தெங்கியாநத்தம், பைத்தந்துறை, தென்செட்டியந்தல் உள்ளிட்ட ஏரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிரம்பி சின்னசேலம் ஏரிக்கு நீர்வரத்து இருந்தது. அதேபோன்று மயூரா நதியில் இருந்தும், எலவடி ஏரியில் இருந்தும் இந்த ஆண்டு அதிக நீர்வரத்தின் காரணமாக சின்னசேலம் ஏரி நேற்று முன்தினம் நிரம்பி வழிந்தோடியது. இதையடுத்து சின்னசேலம் முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சியில் ஏரி கோடி பகுதியில் பூஜை செய்தனர்.