• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சென்னையிலிருந்து கோவைக்கு பறந்த குழந்தைகள்!

BySeenu

Jan 25, 2025

ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிறகுகள் கொடுத்த ரவுண்ட் டேபிள் & லேடீஸ் சர்க்கிள் அமைப்புகள்! தன்னார்வ தொண்டு அமைப்புகளால் சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் பறந்த 15 குழந்தைகள்!

கோயம்புத்தூர் வடக்கு லேடிஸ் சர்க்கிள் 11, கோயம்புத்தூர் வடக்கு ரவுண்ட் டேபிள் 20, மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100, ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ‘ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி’ என்ற நிகழ்வின் மூலம் சென்னையில் உள்ள ஆதரவற்ற இல்லத்தில் இருந்து15 குழந்தைகளை கோவைக்கு விமானத்தில் அழைத்து வந்து கோவையில் ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கினர்.

இது பற்றிய கூடுதல் விவரங்களை வழங்க, ஆர்.எஸ்.புரம் புரூக்ஃபீல்ட்ஸ் மாலில் உள்ள சேரன் ஹாலில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. கோவை ரவுண்ட் டேபிள் 20 -ன் தலைவர் அருண் குணசேகரன், மெட்ராஸ் ஆங்கரேஜ்ரவுண்ட் டேபிள் 100 -ன் தலைவர் நரேஷ் மற்றும் கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் 20 -ன் பொருளாளர் அரவிந்தன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இது குறித்து கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் 20 -ன் பொருளாளர் அரவிந்தன் பேசுகையில், ‘ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி’ என்ற திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும், சென்னை அல்லது கோயம்புத்தூரிலிருந்து ஒரு ஆதரவற்ற இல்லத்தை தேர்ந்தெடுத்து அதில் மிகவும் ஒழுக்கமான, படிப்பில் சிறந்து விளங்கும், திறமையான குழந்தைகளை விமானத்தில் அழைத்து சென்று மற்ற நகரத்தின் முக்கியமான சுற்றுலா தளங்களுக்கு நேரில் அழைத்து சென்று மீண்டும் அவர்களை ஆதரவற்ற இல்லத்தில் சேர்ப்போம். இது அந்த குழந்தைகளுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கிவருகிறது.

இந்த ஆண்டு, சென்னையில் உள்ள SRS சர்வோதயா இல்லத்திலிருந்து 15 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைத்து குழந்தைகளும் தற்போது பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் இன்று சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு விமானத்தில் காலை 9:30 மணிக்கு விமான நிலையத்தை அடைந்தனர். ​​அவர்கள் ஈஷா யோகா மையம், ஸ்னோ ஃபேண்டஸி (புரூக்ஃபீல்ட்ஸ் மாலுக்குள் உள்ள பனி பூங்கா) ஆகியவற்றை கண்டு மகிழ்ந்தனர். மேலும் இந்த மாலில் தங்களுக்கு தேவையான (Stationery) நோட், எழுத்து பொருட்கள் , ஷாப்பிங் செய்தனர். மீண்டும் மாலை 6:30 மணிக்கு கோயம்புத்தூரிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர்.

“இந்த பயண அனுபவம் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாததாக இருக்கும். கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு முதல் முறையாக விமானத்தில் பறக்கக்கூடிய அனுபவத்தை வழங்கியுள்ளது என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம். குழந்தைகள் அனைவரும் விமானத்தில் பறந்ததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். பயணத்தை துவக்கம் முதல் இறுதி வரை முழுமையாக அனுபவித்தனர்,” என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

அடுத்த ஆண்டு ஒரு விமானம் முழுவதும் குழந்தைகளை அழைத்துவர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம் என இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.