மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை கிராமத்தில் 4-வது ஆண்டாக சோழம்பேட்டை- மாப்படுகை பாலர் பூங்கா சார்பில் குழந்தைகள் பேரணி நடைபெற்றது. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள ஆய்வறிக்கையை தொடர்ந்து, காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து மயிலாடுதுறையை மீட்டெடுப்போம் என்ற முன்னெடுப்போடு நிகழாண்டு இந்த பேரணி நடத்தப்பட்டது.

மாப்படுகை அண்ணா சிலை முன்பு தொடங்கிய பேரணியை குடிமராமத்து கமிட்டி தலைவர் ராஜேஷ்வரன் தொடக்கி வைத்தார். இந்த பேரணியில் குழந்தைகள், இளஞ்சிரார்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பேரணியாக சென்று பேரணி மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில் நிறைவடைந்தது. பேரணியை மூத்த வழக்கறிஞர் பாலு முடித்து வைத்தார். இந்த பேரணியில் நீர்நிலைகளை தூய்மையாக பாதுகாப்போம், நிலத்தடி நீரை உயர்த்திடுவோம், நஞ்சில்லா உணவை உறுதி செய்வோம், நெகிழியை தவிர்ப்போம் ,போதை இல்லா சமூகத்தை உருவாக்குவோம் என மாணவர்கள் மற்றும் குழந்தைகள் முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியில் பங்கேற்றனர். இந்த பேரணியை இயற்கை விவசாயி ராமலிங்கம் ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தார்.




