• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

விசாரணை கைதி மரணம் குறித்து முதல்வர் விளக்கம்

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக அரசு எடுத்து வருகிறது என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு பதிலளித்து அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சி.வி.கணேசன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அப்போது அதிமுக சார்பில் , சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விசாரணை கைதி மரணம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்த ஏப்.18-ம் தேதி பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ் ஆகிய இருவரும் வந்த ஆட்டோவை கெல்லீஸ் அருகிலே, காவல்துறையினர் நிறுத்தியிருக்கிறார்கள்.

கஞ்சா போதையில் இருந்த அவர்கள், காவல்துறையினர் விசாரித்த போது, சரியான பதில் சொல்லாத காரணத்தால், வாகனத்தையும், அவர்களையும் போலீஸார் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின்போது அவர்களிடம் கஞ்சா, மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்திருக்கிறது.

பிறகு இருவரையும் காவல் நிலையத்திற்கு வருமாறு போலீஸார் அழைத்துள்ளனர். இதில் விக்னேஷ் என்பவர் காவல் நிலையத்திற்கு வர மறுத்திருக்கிறார். அதோடு மட்டுமின்றி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவல்துறையினரை தாக்க முயற்சி செய்திருக்கிறார். அதனை சமாளித்து இருவரையும் போலீஸார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து, ஆட்டோவில் இருந்த கஞ்சா, மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இவர்களின் பின்புலத்தை FRS என்ற செயலின் மூலம் ஆய்வு செய்த போது, சுரேஷ் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 11 வழக்குகளும், விக்னேஷ் மீது ஏற்கெனவே இரண்டு வழக்குகளும் இருப்பது தெரியவந்தது. கடந்த 19.4.2022 அன்று இருவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டிருக்கிறது. காலை உணவு சாப்பிட்ட பின், விக்னேசுக்கு வாந்தி மற்றும் வலிப்பு வந்திருக்கிறது. இதையடுத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை போலீஸார் அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்த நிலையில் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இறப்பு குறித்து சந்தேக மரணம் என்று முறைப்படி வழக்குப்பதிவு செய்து மாஜிஸ்திரேட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விக்னேஷின் உடல் 20.4.2022 அன்று, மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் மருத்துவக் குழுவினரால் பிணக்கூராய்வு செய்யப்பட்டுள்ளது.

இது வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவுற்ற பின்னர், 20.4.2022 அன்று முறைப்படி அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தலைமைச் செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்க்காவல் படைக் காவலர் தீபக், ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறை இயக்குநர் மேல் விசாரணைக்காக இந்த வழக்கினை 24.4.2022 அன்று, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். எனவே விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக அரசு எடுத்து வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக காவல் மரணங்களை தீர விசாரிக்கப்பட்டு அது எவ்வாறானதாக இருந்தாலும், அந்த நிகழ்வில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.

அதே வகையில் இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு, கடைகோடி மனிதர்களுக்கும் அவர்களது மனித உரிமை காக்கப்பட்டு, உரிய நீதி கிடைத்திட இந்த அரசும் திமுக என்றைக்கும் துணை நிற்கும் என்பதை அவையில் இருக்கும் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வழக்கின் முடிவுகள் எப்படியிருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில், உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். அதே நிலையில் சுரேஷின் உயர் சிகிச்சைக்கான செலவுகளை அரசு ஏற்கும்” என்று அவர் கூறினார்.