விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
பிறகு சமத்துவபுரத்தை பார்வையிட்ட ஸ்டாலின் வீரர்களுடன் சேர்ந்து வாலிபால் விளையாடினார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நலத்திட்டங்களை துவக்கி வைத்து , பயனாளிகளுக்கு திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அதன்படி இன்று முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். விழுப்புரம் அருகே கொழுவாரி ஊராட்சியில் 100 வீடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
அதன்படி இன்று காலை 9 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் கொழுவாரி ஊராட்சி பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்தார். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பயனாளி ஒருவர் ரிப்பன் வெட்டி தனக்கு வழங்கப்பட்ட வீட்டுக்குள் சென்றார். மேலும் அவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தை பார்வையிட்டார். மேலும் கலைஞர் பூங்கா, விளையாட்டு திடலை அவர் திறந்து வைத்தார். மேலும் சர்வீஸ் செய்து வாலிபால் போட்டியை துவக்கி வைத்தார். வீரர்களுடன் அவர் வாலிபால் விளையாடினார். ரேஷன் கடையை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அதன்பின் விழா மேடையில் சமத்துவ புரத்துக்கான கல்வெட்டை திறந்து வைத்தார். குடியிருப்பு பெற்ற பயனாளிகளுக்கு சாவி வழங்கினார். இதையடுதுது பயனாளிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். பயனாளிகள் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையடுத்து பெரியார் நினைவு சமத்துவபுரம் வளாகத்தில் நூலகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்துக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். காலை 9.30 மணியளவில் ஒழுந்தியாம்பட்டு பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நிறைவு பெற்ற பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இதையடுத்து காலை 10.30 மணியில் திண்டிவனம் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். காலை 11 மணிக்கு திண்டிவனம் பெலாக்குப்பத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். முதல்வர் ஸ்டாலினின் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.