தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி தராமல் வைத்துள்ள மசோதாக்களுக்கு அனுமதி வழங்க உடனே உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்வதிவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, மசோதாக்களை நிறுத்தி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல் சட்டப்படி தவறு என்றும், 10 மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்திவைத்தது தவறு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கவர்னருக்கு என தன்னிப்பட்ட (VETO) அதிகாரம் இல்லை, என்றும் நீதிபதிகள் தெரிவித்த நீதிபதிகள், ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை அனுப்பி வைத்த ஆளுநரின் நடவடிக்கை ரத்து என தீர்ப்பளித்துள்ளனர்.
இந்நிலையில் ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இன்று(ஏப்ரல் 8 ) தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை நிலைநாட்ட தமிழ்நாடு தொடர்ந்து போராடும். என்று கூறியுள்ளார்.