மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்ள கேரளா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பலத்த வரவேற்பு.
கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்து உரையாட உள்ள நிலையில், இந்த மாநாட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிபிஎம் கட்சிக்கு நட்பாக இருக்கும் தேசிய அளவில் உள்ள தலைவர்களை அழைக்க கட்சி முடிவு செய்து இருந்தது. அதன்படி, கேரள அறநிலைய துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் அவர்கள் சிபிஎம் கட்சியின் சார்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேரடியாக சென்று அழைப்பு விடுத்திருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிபிஎம் கட்சி இடம் உறுதியளித்தார்.
இதனையடுத்து இன்று காலை விமானம் மூலம் கேரளா சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள அமைச்சர்கள் தலைமையிலான குழு பலத்த வரவேற்பு அளித்தது. அமைச்சர் எம்.வி.கோவிந்தன் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து சிவப்புத் துண்டு போர்த்தி வரவேற்பு அளித்தார்.
அதனை தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து ஸ்டாலின் அவர்கள் பெரிய கூலிங்கிளாஸ் அணிந்தபடி வெளியே வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவருக்கு சிபிஎம் கட்சியின் தொண்டர்கள் சிவப்பு கொடியை காட்டி பலத்த வரவேற்பளித்தனர். மேலும் ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் புகைப்படங்களை வைத்து கண்ணூரில் சில இடங்களில் கட்டவுட் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாலை நடைபெறவுள்ள மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.