

மகளிர் அரசியலையும், சமுதாய நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதற்காக 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை தந்தவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெருமிதம்.
விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பாக பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பட்டியலினத்திற்கான ஊராட்சி நிர்வாகம் குறித்த கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தை பொருத்தவரை 50 சதவீதத்திற்கும் மேலாக அதிக அளவில் பெண்கள் உள்ளாட்சி மன்ற பொறுப்புகளில் அங்கம் வகிக்கின்றனர். இது தமிழகத்திலேயே அதிக அளவு பெண்கள் கொண்ட உள்ளாட்சி நிர்வாகம் விழுப்புரம் மாவட்டம் தான் என்ற பெருமை நமக்கு உண்டு. மேலும் பெண்கள் அரசியலையும் உள்ளாட்சி நிர்வாகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் நாம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்துள்ளார். எனவே பெண்கள் தங்களுக்கான அதிகாரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். தங்கள் ஊராட்சியில் குடிநீர், வடிகால்வாய், மின்சாரம் ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டார். மேலும் தங்கள் ஊராட்சியை தூய்மையாக வைத்திருக்க ஊராட்சி மன்ற தலைவர்கள் முயற்சிக்க வேண்டும். மேலும் பெண்கள் தங்கள் கணவர்கள் அதிகாரம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட குழு தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
