• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மயானக் கொள்ளை – கொண்டாட்டம் எதற்காக?

மாசி மாத அமாவாசை நாளன்று, அனைத்து அங்காள பரமேஸ்வரி கோயில்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறுவது வழக்கம்.

இவ்விழா கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன?
சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

கதை..
முன்முதலாக, பிரம்மாவுக்கும் ஈசனைப்போல ஐந்து தலைகள் இருந்தன. எனவே, சிவனை நாம் ஏன் வணங்க வேண்டும் என்று ஆணவம் கொண்டார் பிரம்மா. அவரது ஆணவத்தை அழிக்க, பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்துவிட்டார், சிவபெருமான். அதன் காரணமாக சிவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டதுடன், கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவபெருமானின் கரத்தில் வந்து அமர்ந்தது.

அதை அவர் கீழே போட்டாலும் மீண்டும் அவர் கரத்துக்கே வந்தது. இவ்வாறு 99 முறை நடந்த நிலையில், “அதைக் கீழே போடாமல் சிறிது நேரம் கையிலேயே வைத்திருங்கள்’ என்று பார்வதி தேவி சிவனிடம் கூறினாள். அவர் அவ்வாறே செய்ய, பிரம்மாவின் தலை கபாலமாக மாறி அவர் கரத்திலேயே ஒட்டிக் கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை..!

இந்நிலையில், பிரம்மாவின் தலை கொய்யப்பட்ட வேதனையில் இருந்த சரஸ்வதி தேவி, அது கபாலமாக மாறி சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுமாறு உபாயம் கூறிய பார்வதிமீது சினம் கொண்டு, “கொடிய உருவத்துடன் பூவுலகில் திரிக!’ என சாபமிட்டாள். அதன்படி பார்வதி தேவி பூவுலகில் பல தலங்களில் அலைந்து, முடிவில் மலையனூர் வந்தாள். அங்கே அங்காள பரமேஸ்வரியாகக் கோயில் கொண்டாள்.

அப்போது ஈஸ்வரனும் மலையனூர் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள். எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட, அங்கு வந்த மகாலட்சுமி பரமேஸ்வரிக்கு ஒரு உபாயம் கூறினாள். அதன்படி பரமேஸ்வரி இரண்டு கவளம் உணவை கபாலத்தில் இட்டாள். அதை கபாலம் உண்டுவிட்டது. மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோல கீழே போட்டாள். உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது.!

அப்போது அங்காள பரமேஸ்வரி விஸ்வ ரூபமெடுத்து, பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கரத்தை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள். ஈசனைப் பற்றிய பிரம்மஹத்தி தோஷமும் அகன்றது. இந்த சம்பவத்தின் அடிப்படையில்தான் மயானக் கொள்ளை எனும் விழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.