நாளை முதல் அனைத்து ரயில்களிலும் கேட்டரிங் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. 2020 மார்ச் மாதத்தில் பாதிப்பு உக்கிரம் அடைந்ததால் , அப்போது நாடு ழுமுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பல்வேறு சேவைகள் நிறுத்தப்பட்டன .
அந்த வகையில் ரயில்களில் ஐஆர்சிடிசி கேட்டரிங் சேவையும் நிறுத்தப்பட்டது . கொரோனா குறைந்ததும் சில மாதங்களுக்கு முன்பாக நாடு முழுவதும் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. அப்போது ஐ.ஆர்.சி.டி.சி கேட்டரிங் சேவை இல்லாததால் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கடந்த ஆண்டு இறுதியில் ப்ரீமியம் ரயில்களான ராஜதானி , சதாப்தி , டுராண்டோ ஆகிய ரயில்கள் கேட்டரிங் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நாளை (பிப்ரவரி 14) முதல் அனைத்து ரயில்களிலும் கேட்டரிங் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது .
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில் , ஐ.ஆர்.சி.டி.சி. கேட்டரிங் சேவையை மீண்டும் தொடங்குகிறது.
ஆனாலும் கொரோனா தடுப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு உணவுகள் வழங்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் கூறியுள்ளது.