• Thu. Apr 25th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 354

குறள் 354

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர்வு இல்லா தவர்க்கு. பொருள் (மு.வ): மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.

குறள் 353

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வானம் நணிய துடைத்து. பொருள் (மு.வ): ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

குறள் 352:

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு. பொருள் (மு.வ): மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

குறள் 351:

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்மருளானாம் மாணாப் பிறப்பு. பொருள் (மு.வ): மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

குறள் 350

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு. பொருள் (மு.வ): பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

குறள் 349

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுநிலையாமை காணப் படும். பொருள் (மு.வ): இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.

குறள் 348

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிவலைப்பட்டார் மற்றை யவர். பொருள் (மு.வ):முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.

குறள் 347

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு. பொருள் (மு.வ): யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.

குறள் 346

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் புகும் பொருள் (மு.வ): உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

குறள் 345

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்உற்றார்க்கு உடம்பும் மிகை. பொருள் (மு.வ): பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?.