குறள் 694
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்ஆன்ற பெரியா ரகத்து பொருள்( மு.வ): வல்லமை அமைந்த பெரியாரிடத்தில், (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதலும் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுக வேண்டும்.
குறள் 693
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்தேற்றுதல் யார்க்கும் அரிது பொருள் (மு.வ): (அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக்கொள்ள விரும்பினால், அரிய தவறுகள் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்; ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.
குறள் 692
மன்னர் விழைப விழையாமை மன்னரால்மன்னிய ஆக்கந் தரும் பொருள்(மு.வ): அரசர் விரும்புகின்றவைகளைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.
குறள் 691
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் பொருள்(மு.வ): அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர்போல இருக்க வேண்டும்.
குறள் 690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்குஉறுதி பயப்பதாம் தூது பொருள் (மு.வ): தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.
குறள் 689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்வாய்சேரா வன்க ணவன் பொருள்(மு.வ): குற்றமான சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.
குறள் 688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்வாய்மை வழியுரைப்பான் பண்பு பொருள் (மு.வ): தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.
குறள் 687
கடனறிந்து காலங் கருதி இடனறிந்துஎண்ணி உரைப்பான் தலை பொருள் (மு.வ): தன் கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தை எதிர்நோக்கித் தக்க இடத்தையும் அறிந்து ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.
குறள் 686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்தக்கது அறிவதாம் தூது பொருள் (மு.வ): கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல், கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.
குறள் 685
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லிநன்றி பயப்பதாந் தூது பொருள்(மு.வ): பலவற்றைத் தொகுத்துச் சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.








