விஜயகாந்த் மறைவுக்குப் பின் வேகமாக தேயத் தொடங்கிய தேமுதிக, தற்போது அவரது மகன் விஜய பிரபாகரன் வருகைக்குப் பின் மெல்ல மெல்ல புத்துணர்ச்சி காணத் தொடங்கியுள்ளது.
ஆனபோதும் கோஷ்டிப் பூசல் காரணமாக அந்த வளர்ச்சியும் தளர்ச்சியை நோக்கியே செல்கின்றது.
தேமுதிகவின் தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றிய செயலாளர் முத்து சிவகுமாரிடம் நமது அரசியல் டுடே சார்பாக பேசினோம்.
“1994 இல் இருந்து கேப்டன் மன்றம் ஆரம்பித்ததில் இருந்தே திருபுவனம் ஒன்றிய தலைவராகவும், கேப்டன் கட்சி தொடங்கிய பிறகு மாவட்ட இணை செயலாளர், திருவோணம் ஒன்றிய செயலாளராகவும் இருக்கிறேன். இரு முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன்.
நான் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவன். மாவட்ட செயலாளர் சிவனேசன் கள்ளர் சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் என்னை கட்சியிலிருந்து ஓரம் கட்ட தொடங்கினார். மேலும் எனது தொகுதிக்கு வரும்பொழுது ஒன்றிய செயலாளர் என்ற முறையில் தகவல் ஏதும் தெரிவிக்காமல் அவரே அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். என் ஒன்றியத்தில் நடக்கும் கட்சி நிகழ்ச்சி குறித்த சுவரொட்டிகளில் கூட என் பெயர் இருக்காது.
அவரிடமே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதற்கு என்னை ஒருமையில் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்.
இதற்கு முன்னதாக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளராக கள்ளர் சமுதாயத்தை சேர்ந்த டாக்டர் ராமநாதன் இருந்தார். அவரிடம் சாதிய ரீதியான பாகுபாடு இல்லை. ஆனால் இவர் மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களை தலைமைக்கு தகவல் கொடுக்காமல் அதிரடியாக நீக்குவதும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
சமீபத்தில் ஒரத்தநாட்டிற்கு வந்த பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம் பொருளாளர் சுதீஷ் இடமும் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. கேப்டன் விஜயகாந்திற்காக மன்றம் மற்றும் கட்சியில் சேர்ந்து கடனாளியாக ஆனது தான் மிச்சம்” என வேதனையோடு தெரிவித்தார்.
இவரது புகார் குறித்து மாவட்ட செயலாளர் சிவனேசனிடம் தொடர்பு கொண்டு கேட்டோம்.
”முத்து சிவகுமார் என் மேல் வைத்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது ஆதாரமற்றது.
கட்சியில் பொறுப்பு கொடுத்தால் அவர் சரியாக செயல்படுவதில்லை மற்றவர்களையும் செயல்பட விடுவதுமில்லை . தற்பொழுது மாநகர மாவட்டத்தில் 3 ஒன்றிய செயலாளர் பொறுப்பில் உள்ளார்கள்.
ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் கள்ளர் சமூகத்தை சார்ந்தவர். மேலும் உள்ள இரண்டு ஒன்றிய செயலாளர்கள் முத்தரையர் சமுதாயத்தை சார்ந்தவர்கள். அவர் மாவட்ட செயலாளர் பதவிக்கு ஆசைப்படுகிறார். தலைமையின் உத்தரவுப்படி முத்து சிவகுமாரை திருவோணம் ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்துள்ளேன். இனி அவர் இந்த கட்சியில் இருந்து செயல்பட வேண்டும் என்றால் பொதுச் செயலாளர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
வீட்டுக்கு வீடு வாசப்படி.. கட்சிக்கு கட்சி கோஷ்டிப் பூசல்!
