கரூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு – விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் கார் முழுமையாக எரிந்து நாசமானது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியகுளத்துப்பாளையம் ஜாமியா நகரை சார்ந்தவர் நாவீத் அஹ்மத். இவரது ஜைலோ காரை சர்வீஸ் விடுவதற்கு சேலம் பைபாஸில் உள்ள தனியார் சர்வீஸ் செண்டருக்கு சென்றுள்ளார். அப்போது, நாவீத் அஹ்மத்தும், மெக்கானிக்கும் சேர்ந்து காரை ஓட்டிப் பார்க்க சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். ராம் நகர் பிரிவு அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வருவதை பார்த்த அவர்கள் காரை விட்டு கீழே இறங்கி விட்டனர்.
அதனை தொடர்ந்து தீ மளமளவென பிடித்து கார் முழுவதுமாக எரிய தொடங்கியது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த காரின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து நாசமாயின. இது தொடர்பாக வெங்கமேடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.