• Sat. Apr 27th, 2024

பாஜகவுடன் கைகோர்த்த கேப்டன் அமரிந்தர் சிங்

Byமதி

Dec 18, 2021

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், அண்மையில் ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற தனிக்கட்சியை தொடங்கினார். இந்நிலையில், எதிர்வரும் பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்த்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அங்கு அரசியல் பிரச்சாரங்கள் தற்போதே தொடங்கி உள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தும் நோக்கத்தில் பா. ஜ.க மற்றும் இதர கட்சிகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய அமரிந்தர்சிங் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வெளியேறினார். பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கிய அவர், வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் கூட்டணி என்று பா.ஜ.க. தலைவர்களிடம் தெரிவித்திருந்தார்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதால் பா.ஜ.க வுடன் இணைய முடிவு செய்து, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத்தை கூட்டணி தொடர்பாக, புதுடெல்லியில் உள்ள இல்லத்தில் அமரிந்தர் சிங் சந்தித்துள்ளார்.

117 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல். இதில் இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதி பங்கீடு விரைவில் கலந்து ஆலோசிக்கப்பட்ட பின்னர் உறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமரிந்தர் சிங் பேட்டியளித்த போது, ‘எங்கள் கூட்டணி தேர்தலில் 101 சதவீதம் வெற்றி பெறும். எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை இறுதி செய்வதே வெற்றிக்கான முக்கிய அளவுகோலாக இருக்கும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *