இந்தியாவில் இருந்து 40 கனடா தூதரக அதிகாரிகளை அதிரடியாக இந்தியா வெளியேற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையே மிகப்பெரும் மோதல் நடந்துவரும் நிலையில், 40 கனட தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா கேட்டு கொண்டுள்ளது. இது குறித்த செய்தியை பினான்சியல் டைம்ஸ் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 10ஆம் தேதிக்குப் பிறகும் கனேடிய தூதர்கள் இந்தியாவில் தங்கியிருந்தால், அவர்களது பொறுப்பை நீக்கிவிடுவோம் என்று இந்தியா மிரட்டியதாக இந்த விஷயத்தைப் நன்கு அறிந்த ஒருவர் பினான்சியல் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 62 கனட அதிகாரிகள் இந்தியாவில் உள்ளனர். அவர்களது எண்ணிக்கையை 41ஆக குறைக்க வேண்டும் என்று இந்தியா கூறியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து இந்திய அரசு இன்னும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. இந்தியாவால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட நிஜ்ஜார், கடந்த ஜூன் 18ஆம் தேதி, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக சமீபத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டால், ஏற்கனவே பதட்ட நிலையில் இருந்த இந்திய-கனடா உறவு மேலும் மோசமாகியது. இந்நிலையில், தற்போது 40 கனட அதிகாரிகளை இந்தியா வெளியேற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்..!








