• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு

Byவிஷா

Sep 11, 2025

நாட்டின் 15ஆவது குடியரசு துணைத்தலைவராக டாக்டர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்க உள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் பதவி விலகியதை தொடர்ந்து, அப்பதவிக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், இதில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் மொத்தம் பதிவான 767 வாக்குகளில், சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்றார். எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியுற்றார்.
இந்நிலையில் நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்க உள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளார். டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக உள்ளார். குடியரசு துணைத் தலைவராக பதவியேற்கும் முன் அவர் இப்பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு துணைத் தலைவரே மாநிலங்களவையின் அலுவல் வழி தலைவர் ஆவார். எனவே எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் கடமையாற்றுவார்.