• Fri. Apr 26th, 2024

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்..,
அதிமுக வேட்புமனு படிவத்தில் கையெழுத்திடப் போவது யார்..?

Byவிஷா

Jun 27, 2022

தமிழகத்தில் ஜூலை 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனுத்தாக்கலில் கையெழுத்திடப் போவது யார்? என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும், பதவி விலகியதாலும் அந்த இடங்கள் காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (ஜூன் 27) கடைசிநாள் ஆகும். இதன்படி நாளை மாலை 5 மணிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். மொத்தம் தேர்தல் நடைபெற உள்ள 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளதால், வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கட்சிகளின் சின்னத்தை ஒதுக்க உள்ளது.
மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் சம்பந்தபட்ட கட்சியைச் சார்ந்தவர்களின் தலைவர்கள் கையெழுத்து இட வேண்டும். அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் இந்த படிவங்களில் கையெழுத்து இட்டுவந்தனர்.
தற்போது அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசலில், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே செல்லாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில் இந்த படிவங்களில் யார் கையெழுத்து இடுவார்கள் என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த ஏ மற்றும் பி படிங்களை வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான ஜூன் 30ஆம் தேதி மாலை 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும். இதன்படி அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வரும் 30ஆம் தேதிக்குள் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்தைப் பெற்று வேட்புமனுக்களை சமர்பிப்பார்களா அல்லது மாட்டார்களா? அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *