• Fri. Apr 18th, 2025

புத்த மதத்தினர் கோஷங்களை எழுப்பி திடீர் போராட்டம்..,

ByR. Vijay

Apr 12, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மை நல ஆணைய கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் சொ.ஜோ அருண், துணை தலைவர் குத்தூஸ், உறுப்பினர்கள் , மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், எஸ்பி அருண் கபிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள், பௌத்தம் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்தனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பௌத்தர்கள் சார்பாக முதியவர் ஒருவர் ஆங்கிலத்தில் பேசி தங்களுக்கான கோரிக்கைகளை தெரிவித்தார்.

பின்னர் கூட்டம் முடிந்து அனைவரும் வெளியேறும் போது பௌத்த மதத்தினர் சுமார் 10 பேர் சிறுபான்மை தலைவரிடம் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய ஆணைய தலைவர் அந்த முதியவரை பார்த்து தண்ணிய போட்டுவிட்டு பேசுகிறீர்கள் என்று நக்கலாக கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த புத்த மதத்தினர் நல ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் முன்னிலையில் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், ஆணைய தலைவரை சூழ்ந்து. வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் எஸ்பி அருண் கபிலன் தலைமையிலான போலீசார் ஆணைய தலைவர் ஆட்சியர் ஆகியோரை பாதுகாப்பு நிகழ்ச்சி அரங்கில் இருந்து வெளியே அழைத்து சென்றனர். புத்த மதத்தை சேர்ந்த முதியவரை ஒரு அரசு நிகழ்ச்சியில் அவமரியாதையாக பேசி அவமதித்த சிறுபான்மை நல ஆணைய தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புத்த மத சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே புத்த மத அமைப்பை சேர்ந்தவர்கள் சிறுபான்மை நல ஆணைய தலைவர் மீது நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.