• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை கள்ளழகர் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம்..!!!

Byகுமார்

Aug 12, 2022

மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் இன்று ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அழகர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற மிக முக்கிய திருத்தலம் என பெயர் பெற்றுள்ளது.பாண்டிய நாட்டு வைணவ திருத்தலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ள திருத்தலம் இதுவாகும். இதில் முக்கிய திருவிழாவாக இரண்டு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.அதில் ஒன்று சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்வர். அதற்கு அடுத்தபடியாக ஆடி மாதம் பத்து நாட்கள் நடைபெறக்கூடிய இந்த ஆடி பிரம்மோற்சவ திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி பிரம்மோற்சவ திருவிழாவானது கடந்த நாண்காம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள தங்ககொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் கள்ளழகர் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அன்னம் பூத வாகனம் ரிஷப வாகனம் கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் கோவில் வளாகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் ஒன்பதாம் நாள் திருவிழாவாக திருத்தேரோட்டம் நடைபெறும்.இதனை ஒட்டி இன்று திருத்தேரில் கள்ளழகர் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து கோவிந்தா கோஷமுழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் இந்த திருவிழாவில் சிவகங்கை திண்டுக்கல் ராமநாதபுரம் மதுரை தேனி விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நடுவே தேர் ஆடி அசைந்து வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது .இதனைத் தொடர்ந்து கள்ளழகர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். தென் மாவட்ட மக்களின் மிக முக்கிய திருவிழாவாக இந்த திருவிழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறக்கூடிய இந்த தேரோட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தேரோட்டம் நடைபெறாமல் அதற்கு உரிய பரிகார பூஜைகள் மட்டுமே கோவில் வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று தாக்கம் குறைந்ததை அடுத்து முன்னேறுபாடுகளுடன் கூடிய தேரோட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் .தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளதால் இப்பகுதியே மனித தலைகளாக காட்சியளித்து வருகிறது.