போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் கடுமையாக தாக்கி கொண்டனர். காவலர் அன்வர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருக்கும் கோடாங்கி நாயக்கன்பட்டி மற்றும் புதூர் கிராமத்தில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
இந்த இரண்டு ஊருக்கும் அடிக்கடி சின்ன, சின்ன பிரச்சனைகள் வருவது உண்டு.
சமீபத்தில் புதூரைச் சேர்ந்த மாசித் என்பவருக்கும் கோடாங்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிலருக்கு முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து அந்த ஊர் மக்கள் மாசித் மீது புகார் கொடுத்துள்ளனர்.
அந்தப் புகார் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து அது பொய் புகார் என தெரிந்து விசாரணையில் இருந்து மாசித் விடுவிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கோடாங்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஒரு சிலரை தனக்கு துணையாக வைத்துக் கொண்டு நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு ஓட்டுனராக பணிபுரியும் கோடாங்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த அன்வர் என்பவர் மாசித் மீது கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாசித் என்பவர் வேலைக்குச் சென்று விட்டு புதூர் வரும் வழியில் கோடாங்கி நாயக்கன்பட்டி பிரிவு அருகே வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதை அறிந்த புதூர் மக்கள் ஒன்று திரண்டு அந்த இடத்திற்கு சென்றபோது, போலீசார் முன்னிலையில் இரண்டு ஊர் காரர்களும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். இந்த பிரச்சனைக்கு முழு காரணம் காவலராக பணி புரியும் அன்வர் என்பவர் தான் என புதூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது சம்பந்தமாக புதூர் ஜமாத் நிர்வாகிகள் கூறும்போது இரண்டு ஊரும் எப்போதும் ஒற்றுமையாகவே இருந்து வருகிறோம். அவ்வப்பொழுது சில, சில பிரச்சனைகள் நடக்கும் பிறகு சரியாகிவிடும்.
ஆனால் இந்த அன்வர் என்பவர் எப்பொழுது காவல்துறையில் பணியில் சேர்ந்தாரோ அப்போதிருந்து பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்குகிறார். ஆகையால் காவலர் அன்வரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.