கோவை ரத்தினபுரி பகுதி சேர்ந்த எஸ். சரவணன் மற்றும் அவரது நண்பர்கள்,
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்புத் துணியால் கண்ணை கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டருக்கு மனு அளித்தனர். அந்த மனுவில் எஸ். சரவணன் கூறியிருப்பதாவது,
25 ஆண்டுகளுக்கு கிரைண்டர் தேவையான உதிரிபாகங்கள் உற்பத்தி செய்து வருகிறேன். எனது தொழில் அபிவிருத்திக்காக, கோவை வெள்ளாணைப்பட்டி பகுதியில் உள்ள எட்டே கால் சென்ட் இடத்தினை, என்.ஜி.எஸ் பைனான்ஸ் நிறுவனத்தின்
நிறுவனர் என். சரவணனிடம் அடமானக் கிரையம் செய்து பணம் பெற்றிருந்தேன்.
அந்தப் பணத்திற்கான வட்டி முழுவதும் செலுத்தி வந்த நிலையில், தொகை முழுவதும் செலுத்தி இடத்தை திருப்ப முயன்ற போது , எனது இடத்தை அவர் கொடுக்க மறுத்து வந்தார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதையடுத்துஅவர் மீது கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தேன். இதையடுத்து அவர் மீது எஃப் ஐ ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் அவர் மீது காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர்.
எனவே, எனது நிலைத்தினை அபகரிக்க வேண்டும் என்று எண்ணத்தில் செயல்படும் என்.ஜி.எஸ் பைனான்சியர் என். சரவணன் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனது நிலத்தினை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு அளிக்க வந்த போது பாரத் சேனா மாநிலத் தலைவர் செந்தில் கண்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.