• Fri. Apr 26th, 2024

உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கேட்டு அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில், அதிக இடங்களை கைப்பற்ற பாஜக மாநில பிரிவு கூட்டணி கட்சியான அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களது வாக்கு சதவீதத்தை உறுதி செய்யும் வகையில் வெற்றிக்காக வியூகம் வகுத்து வருகிறது. அதே சமயம் 10 ஆண்டுகளுக்கு பின்பு ஆட்சியை கைப்பற்றியுள்ள திமுக நகர்புற உள்ளட்சி தேர்தலிலும் வெற்றியை அறுவடை செய்ய காத்திருக்கிறது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
மேலும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் அந்தந்த கூட்டணியில் போட்டியிட உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டது. இதனால் நகர்பு உள்ளாட்சி தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடும் என்றே கூறப்படுகிறது. இதனால் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், அதிமுக பாஜக மட்டுமே இணைந்து கூட்டணியில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, இதனால் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், இந்த முறை அதிமுகவுடன் அதிக இடங்களைப் பெற பாஜக மாநிலப் பிரிவு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. அதிமுகவுடன் சீட் பகிர்வு கூட்டம் தொடங்கும் பட்சத்தில் நாங்கள் அதிக இடங்களை கேட்டு பெறவுளளோம். மேலும் இந்த உள்ளாட்சி தேர்தலில், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் எத்தனை கட்சிகள் இணையும் என்ற கேள்விக்கு, கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்று பதில் அளித்து பேசிய அவர், அதிமுகவுடனான எங்கள் கூட்டணி அப்படியே உள்ளது, மற்ற கட்சிகளின் எண்ணிக்கை பேச்சுவார்த்தையின் போதுதான் முடிவு செய்யப்படும். இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *