

கரூர் மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட கட்சி கொடிகளை, மதுபோதையில் காரில் வந்த நபர்கள் சேதப்படுத்தினர். அவர்கள் வந்த காரை பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்ட பாஜகவின் புதிய அலுவலக திறப்பு விழா மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். கரூர் நகரத்தை ஒட்டி மதுரை புறவழிச்சாலையில் உள்ள புதிய மாவட்ட அலுவலகத்தை அண்ணாமலை திறந்து வைத்தார்.
பாஜக கட்சி அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வின்போது ஏராளமான தொண்டர்கள் புறவழிச்சாலையில் குழுமியிருந்தனர். அதேபோல அந்தப் பகுதி எங்கும் வழிநெடுக அதிக அளவில் பாஜக கட்சி கொடி கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து நிகழ்வில் பங்கேற்று கொண்டிருந்தபோது, கட்சி அலுவலகம் இருந்த அதே சாலையில் காரில் மதுபோதையில் வந்த நான்கு நபர்கள் பாஜக கொடியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு இருந்த ஏராளமான பாஜகவினர் திரண்டு அந்த காரை தடுத்து நிறுத்தி காரில் வந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜகவினர் கைகளால் காரை அடித்து சத்தம் எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலையிட்டு இருவரையும் சமாதானப் படுத்தினர். காரில் வந்த நபர்களிடம் விசாரணை நடத்தியபோது, அரவாக்குறிச்சியைச் சேர்ந்த நபர்கள் என்றும் மதுபோதையில் தெரியாமல் பாஜகவின் கொடியை பிடுங்கி எறிந்ததாகவும் கூறி வருத்தம் தெரிவித்தனர். பாஜகவினரும் வருத்தத்தை ஏற்றுக்கொண்டு புகார் எதுவும் அளிக்கவில்லை. இதையடுத்து போலீசார் மதுபோதையில் வந்த நபர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
