குமரி மாவட்டம் அஞ்சுகிராமம்–மருங்கூர் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் சட்டவிரோதமாக உயர்தர போதைப் பொருட்கள், கஞ்சா, மது பாட்டில்களுடன் ஆடல்–பாடலுடன் பிறந்தநாள் விருந்து நடைபெற்றது. ரகசிய தகவலைத் தொடர்ந்து போலீசார் விரைவில் நடவடிக்கை எடுத்தனர்.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட திடீர் ரெய்டில், லண்டன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 75 பேர் பிடிக்கப்பட்டனர். மேலும், குலசேகரம் பகுதியை சேர்ந்த கோகுல், அவரது மனைவி, ரிசார்ட் உரிமையாளர் ராஜூ உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரிசார்ட்டில் இருந்து அதிகளவு வெளிநாட்டு போதைப் பொருள்கள், கஞ்சா, ஏராளமான மது பாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இது ‘பிறந்தநாள் பார்ட்டி’ எனும் பெயரில் நடைபெற்ற பெரிய அளவிலான போதை விருந்தாக போலீசார் விளக்கம். பிடிக்கப்பட்ட 75 பேரும், சுசீந்திரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வெளிநாட்டு குடியுரிமை, வீசா, தங்கும் அனுமதி உள்ளிட்ட விவரங்கள் பரிசோதிக்கப்படுகின்றன.

சம்பவம் வெளியாகியதும், அஞ்சுகிராமம்–மருங்கூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா ரிசார்ட்களில் நடைபெறும் சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து போலீசார் கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என தகவல்.




