புதுச்சேரி முருங்கப்பாக்கம் துலுக்கானத்தம்மன் நகரை சேர்ந்தவர் பரத் (22) இவர் நகர பகுதி ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அவரது யமாஹா R15 இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று அதனை விடுதி வாசலில் நிறுத்தி விட்டு மறுநாள் பணி முடிந்து வாகனத்தை எடுக்க வந்த போது இருசக்கர வாகனம் திருடு போய் இருந்தது.
இது குறித்து பெரியகடை காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்குமிங்கும் நோட்டமிட்டு பின்னர் வாகனத்தின் மீது அமர்ந்து காலால் சைட் லாக்கை உடைத்து வாகனத்தை திருடி செல்வதும், அதே போல் சிறிது தூரம் வாகனத்தை தள்ளி செல்லும் அவர் மற்றொரு வாகனத்தில் காத்திருந்த அவரது நண்பர் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை காலால் டோப் செய்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து அக்காட்சிகளை கொண்டு போலீசார் 1 மாதமாக விசாரணை செய்து வந்த நிலையில் திருட்டில் ஈடுப்பட்டது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா மற்றும் மனோஜ் என தெரியவர அவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் கல்லூரி மாணவன் சூர்யா மற்றும் மனோஜ் ஆகியோர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து இங்கு இருந்து இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு, செய்யார் பகுதியிலும் சென்று விற்பனை செய்து அப்பணத்தில் உல்லாசமாக செலவு செய்தது தெரியவந்தது.
இதனை அடுத்து திருடிய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு சிறையில் அடைத்தனர்.





