

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட குமாரபுரம் பகுதியில் மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்திற்கு கொண்டு செல்லப்படும் உடல்களை குமாரபுரம் குடியிருப்பு பகுதி வழியாக கொண்டு செல்கின்றனர். இதனால் குடியிருப்பு பகுதிகளில் பூமாலைகளை ஆங்காங்கே சிதறி விட்டு செல்வதால், சுகாதாரக் கேடு ஏற்பட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நோய் பாதிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.
மேலும் ஆண்டிபட்டி பேரூராட்சி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான மின் மயானம் கட்டிடமும் இந்த குமாரபுரம் மயானம் அருகே கட்டப்பட்டு 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் மயானத்திற்கு செல்லும் பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என அப்போது மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். சாலையை மாற்றி அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மேற்கு புறத்தில் உள்ள இடத்தை தேர்வு செய்தனர். அந்த இடத்தில் சாலை வசதி மற்றும் தடுப்பு சுவர்கள் அமைக்க பேரூராட்சி நிதியிலிருந்து சுமார் ஒரு கோடியே 18 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மயானத்திற்கு செல்லும் சாலை பணியை தொடங்குவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் நடந்தது. இந்த சாலைப் பணிகள் சுமார் 900 மீட்டர் அளவில், சாலை ஓரத்தில் உள்ள ஓடையில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பொது மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான மயான சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றதால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சந்திரகலா ,திமுக பேரூர் செயலாளர் சரவணன், முன்னாள் சேர்மன் ஆ. ராமசாமி மற்றும் 18 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

