திருநெல்வேலி டவுண் காவல் நிலைய ஆய்வாளருக்கு பாராட்டு…!
தமிழக அரசானது மாநிலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக 36 காவல் நிலையங்களை தேர்வு செய்து மாவட்ட வாரியாக விருது வழங்கியுள்ளது. இதில் குற்றங்களை கண்டுபிடித்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்தது, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது, சட்டம்- ஒழுங்கைப் பராமரிப்பது, சாலை விபத்துக்களை குறைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது என பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையங்களுக்கு சென்னையில் 27-06-2023 ம் தேதியன்று இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி நெல்லை மாநகரில் டவுண் காவல் நிலையம் 2021-ம் ஆண்டு சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. அதற்குரிய விருதினை பெற்று வந்த டவுண் காவல் ஆய்வாளர் திருமதி.சுப்புலட்சுமியை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் ஐபிஎஸ் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களையும் பாராட்டி, வரும் நாட்களில் சிறப்பாக செயல்படவும் அறிவுரைகள் வழங்கினார்.